Moorthy

Tamil Blog

Sunday, May 23, 2004

பல்லவன் பயணங்கள்

பல்லவன் பயணங்கள்
----------------------------

அக்மார்க் சென்னை வாசியான என் பள்ளிக்கால வாழ்க்கையில் பல்லவன் (அந்நாள் பல்லவன், இந்நாள் மாநகர போக்குவரத்துக் கழகம்) பெரும் பங்கு வகித்தது.

பல்லவனைப் பற்றி நினைவில் நிற்பவை:

1. அடர்த்தியில் Black Hole-உடன் போட்டி போடக்கூடிய ஒரே விஷயம் - காலை, மாலை வேளை பல்லவன் மட்டுமே. 50, 60 காசுக்கு நரக வாசல் வரை அழைத்துச் செல்லும் மலிவு விலை space shuttle.

2. இடம் பிடிக்கும் முறை: இது பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நூற்றிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப் பட்டிருப்பதாக BBC-ல் சொன்னார்கள். என் சொந்த அனுபவம், மற்றும் அந்தக் கட்டுரைகள், இவற்றை ஆதாரமாகக் கொண்டு நான் எழுதிக் கொண்டிருக்கும் 'How to get a seat in PTC for Dummies', 'Idiot's Guide to Seat Catching in PTC', 'Seat catching in PTC demystified', 'PTC & Seat Catching 2.0 in 21 days', 'பல்லவனில் இடம் பிடிப்பது எப்படி' ஆகிய புத்தகங்களின் சாரம் பின் வருமாறு -


Terminus அல்லாத இடத்தில் சீட் பிடித்தல்:
------------------------------------------

உட்கார்ந்திருக்கும் யாராவது எழப் போகிறார் எனில் ஒரு மினி அரசியல் நாடகம் அந்த இடத்தைச் சுற்றி அரங்கேறும். இந்த நவரச நாடகத்தில், தடத்தைப் பொருத்து, போட்டியாளர்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஆறு வரை வேறு படும். வெற்றிகரமாக அந்த இடத்தைப் பிடிக்க வேண்டுமெனில் நான்கு விஷயங்களில் கவனமாய் இருத்தல் அவசியம் -

அ) 'மாண்புமிகு எழுபவர்' எளிதாய் அந்த இடத்தை விட்டு நகரத் தோதாய் இடைவெளி விட வேண்டும். இல்லையேல் 'மாண்புமிகு எழுபவர்' கோபத்திற்கு ஆளாவது நிச்சயம். அது மட்டுமல்லாது, 'மாண்புமிகு எழுபவரும்', நம் போட்டியாளரில் ஒருவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து விடும் பேரபாயம் உள்ளது.

ஆ) 'மாண்புமிகு எழுபவர்' எழுந்த அடுத்த கால் நொடியில் நாம் அந்த இடத்தில் உட்கார ஏதுவாய் நம்மை position செய்து கொள்ள வேண்டும்.

இ) மிக முக்கியமாய், வேறு யாருக்கேனும் சம வாய்ப்பு இருப்பின், அவருக்கு முன்னால் (அவருக்குத் தெரியாத படி) நின்று கொள்வது சாலச் சிறந்தது.

ஈ) வழக்கமாய்ப் போகும் பேரூந்து எனில், வழக்கமான பயணிகளின் 'இறங்கும் இடம்' குறித்த database maintain செய்வது மிக அவசியம். நீண்ட தூரப் பயணியெனில் தூர விலகுவதும், குறைந்த தூரப் பயணியெனில் நெருங்கி நிற்பதும் கால்களின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

Terminus-ல் (பேரூந்து நிறுத்தம்) சீட் பிடித்தல்:
---------------------------------------------

** திறமை 1 **

தேவை:

அ) நன்றாகக் கிழிந்த துண்டு அல்லது கைக்குட்டை
ஆ) வெளியிலிருந்து ஜன்னல் வழிய எட்டி துண்டு/கைக்குட்டை ஆகியவற்றை போடத் தேவையான உயரம்



வழிமுறை:

வழக்கமாக போரூந்து நிற்கும் இடத்தை, GPS போன்ற சாதனங்களின் உதவியின்றி (அல்லது வசதியிருப்பின் உதவியிடன்) குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஒட்டுனரின் வசதிக்கேற்ப நிற்கும் இடத்தில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதை கருத்தில் கொள்வது அவசியம்.

மொத்தத்தில், தடம் எண், ஓட்டுனர், ஓட்டுனரின் மனநிலை, நடத்துனர், நடத்துனரின் மனநிலை, நாள், கிழமை, மீனம், மேஷம், ஆடி, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை ஆகிய விஷயங்களைக் கணக்கிட்டு, வண்டி நிற்கும் இடத்தை அறுதியிட வேண்டும். பின்னர், வண்டி புறப்படும் நேரம் என அட்டவணையில் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னர் இருத்தல் நன்று. வண்டி நிற்கும் இடம் மட்டுமன்றி, புறப்படும் நேரமும் மேற்குறிப்பிட்ட காரணிகள் (ஓட்டுனர், ஓட்டுனரின் மனநிலை...) பொறுத்து வேறுபடுமாகையால் இந்த முன்னெச்சரிக்கை அவசியம்.

நம் ராசி நல்லதாயிருந்து, மழை, தூரல், காற்று, வெயில், வேலை நிறுத்தம் இன்ன பிற தடங்கல்கள் இல்லாதிருப்பின், ஒரு சுபயோக சுப வேளையில் நம் பச்சை தேவதை (என் பள்ளிக் காலங்களில் பல்லவன் பெரும்பாலும் பச்சை நிறத்தினன்) நம் கண் முன் காட்சி அளிக்கக் கூடும். அப்போது கை, கால் உதறலின்றி, கையிலேந்திய கிழிந்த துண்டை (அல்லது கைக்குட்டையை) பேரூந்தின் ஒரு ஜன்னலின் வழியே சீட்டை நோக்கி எறிய வேண்டும். இந்தத் திறமைக்கு இரண்டு வருடப் பயிற்சி அவசியம்.

நன்றாகக் கிழிந்த துண்டு அல்லது கைக்குட்டையை சீட்டில் எறிவதுடன் நம் கடமை முடிந்து விடுவதில்லை. ஓடிச் சென்று முன்பதிவு செய்த இடத்தில் உட்கார்ந்தாலொழிய ஒன்றும் நிச்சயமில்லை.

மனமிருந்தால் மார்கமுண்டு என்றறிருந்து, இஷ்ட தெய்வத்தைப் ப்ரார்தித்து முயல்வோமாயின் ஒரு பத்து விழுக்காடு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

** திறமை 2 **

தேவை:

அ) பேரூந்து நிற்பதற்கு முன்னரே ஓடி ஏறக்கூடிய இளமை
ஆ) நடத்துனரின் வசை மொழிகளைத் தாங்கத் தேவையான சொரணையின்மை. (பேமானி, ஊட்ல சொல்டு வன்ட்டியா?)

வழிமுறை:

இந்தத் திறமையில் பேரூந்து நிற்கும் இடத்தை சரியாகக் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் திறமை 1-ல் குறிப்பிட்டிருந்த காரணிகளைக் கொண்டு பேரூந்து வரக்கூடிய நேரத்தை அறிவது மிக அவசியம்.

நிறுத்தத்திற்குள் பேரூந்து நுழைந்ததும் பேரூந்தின் பின் 'பி. டி. உஷா' செய்ய வேண்டும். பேரூந்தின் வாயிலை அடைந்தவுடன், Matrix Keanu Reeves-ஆக மாறி பேரூந்திலிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்களை bullet-ஆக பாவித்துத் தவிர்த்து முன்னேர வேண்டும். பேரூந்தின் கைப்பிடி நம் கையில் அகப்பட்டதும் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு நம் பாரத்தை வண்டி மீது மாற்ற வேண்டும்.

இந்த 'விக்ரம் தர்மா' சமாசாரத்தின் போது மிகப் பலர் கண்கள் மூடிய ஆழ்நிலை தியான நிலையில் இருப்பர். நீங்கள் அவ்வகையினராயின், பேரூந்தின் மீது பாரத்தைப் போட்டவுடன் தியான நிலையிலிருந்து வெளிவருவது நல்லது. பின்னர், பிடித்தமான ஒரு ஜன்னலோரத்தில் அமர்ந்து, கொண்டு வந்திருக்கும் புட்டியிலிருந்து மடக் மடக் என்று கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும்.

காலை மாலை இரண்டு வேளையிலும் இவ்வாறு பேரூந்தில் இடம் பிடித்து வந்தால் ஜாகிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்று எங்கள் ஊர் 'முன்னா பாய் M. B. B. S' சொல்வதுண்டு.

---------------------

இந்த புத்தகங்களின் கையெழுத்துப் ப்ரதியைப்படித்து மெச்சிய சிலர், இந்த technique-களுக்கு டெல்லி, மும்பை ஆகிய நகரங்களிலும் பயன் இருப்பதாகக் கூறி ஹிந்தி, மராத்தி மற்றும் ஏனைய இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கான முன்னுரிமையை வாங்கிக் கொண்டு விட்டனர் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

----

இந்தப் பதிப்பே இரண்டரைப் பக்கம் வளர்ந்து விட்டதால், மற்ற பல்லவன் விஷயங்கள் அடுத்த பதிவில் (அடுத்தடுத்த பதிவுகளில்?).

TO COME:

1) பல்லவனில் நின்று பயணம் செய்வது எப்படி?
2) பல்லவன் நடத்துனர் ஆகத் தேவையான திறமைகள் என்னென்ன?
3) பல்லவனுக்காக காத்திருக்கும் நேரத்தில் எப்படி பொழுதைப் போக்குவது?

1 Comments:

  • At 5:12 PM, Blogger அன்பு said…

    நகைச்சுவையாக பல நல்ல யோசனைகள் சொல்லியுள்ளீர்கள்... இது பல்லவனுக்கு மட்டுமல்ல, பேருந்தில் பயணிக்கும் உலகிலுள்ள அனைத்து தமிழருக்கும் (இதோட மொழிபெயர்ப்பு வேறுமொழிகளில் வரும்வரைக்கும்) பயன்படும். நன்றி மூர்த்தி, தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்.

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Web Counter by TrafficFile.com