Moorthy

Tamil Blog

Sunday, January 15, 2006

நானும் ஓர் மார்கண்டேயன்
------------------------------------------------

இனி...

என் கண்கள் நீர் வடிக்காது,
வாய் சுடுசொல் உறைக்காது

என் பார்வை என்றும் குறையாது,
குரல் குன்றாது, புத்தி மழுங்காது

நரை என்பதை என் தலை காணாது
வழுக்கையோ, வயோதிகமோ என்னை அண்ட முடியாது

நான் உயிர் விதைக்கப் போவதுமில்லை, வதைக்கப் போவதுமில்லை.

பணப்பேய் என்னை ஆட்டித்தள்ளாது
பற்றும், பாசமும் வாட்டித்தள்ளாது
பொறாமைத்தீ சுட்டெரிக்காது

என் மலமோ, நீரோ யாரும் துடைத்தள்ள வேண்டாம்

கை கால் முடங்கி, முதுகு கூனி
பரிதாபத்திற்கு ஆளாகது என் உடல்
என்று போகும் என்ற
காத்திருப்பிற்கு ஆளாகாது என் உயிர்

என் முகம் என்றும்
அன்று பூத்த மல்லிப்பூ

...

இது வரை என் ஜீவனம் சுக ஜீவனம்

எனக்காகச் சிந்தப்பட்ட
சில கண்ணீர்த்துளிகள் சொல்லின
என் வாழ்க்கை வரலாறு

நான் காலத்தில் உறைந்தவனானேன்
கவலைகளென்பது இனி எனக்கில்லை

- ஆர். விவேகானந்தன்

Sunday, January 23, 2005

புது வருடத்திற்கான முதல் பதிவு...

என் இனிய தமிழ் மக்களே! உங்கள் பாசத்திற்குரிய பார..மன்னிக்க...மூர்த்தி இந்த ஆங்கிலப் புது வருடத்தில் படைத்திருக்கும் முதல் படைப்பு இது. பெருந்திரளென என் வலைப்பக்கத்திற்கு வந்து, வலைப்பதிவுகளை படித்துக் களிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
(இதை வலைப்பதிவென்று அழைப்பது எவ்வளவு பொருத்தம். வலை எங்கு பதியும்? யாருமே உபயோகிக்காத இடங்களில் தானே? - This is "overmuser" at work again!)
---------
இன்றிலிருந்து வாரத்திற்கு ஒரு முறையேனும் ஏதேனும் பதிவு செய்வதாய் உத்தேசம்.
யாரேனும் படிக்கிறார்களோ இல்லையோ, தமிழில் எழுத மறக்காமலிருப்பதற்கேனும் உதவும். (புது வருஷத்ல மொத post போடரதுக்கு மூணு வாரம் ஆயிருக்கு. இவனெல்லாம் வாரத்துக்கு ஒரு தடவையாவது எழுதப் போறானாம். போடாங்...)
-------

எல்லோரும் ஆவலாகப் பார்க்க/படிக்கக் காத்திருக்கும் (??!!) என்னுடய பழைய, 'தினம் ஒரு கவிதை' மின்னஞ்சல் குழுவில் வெளியான கவிதைகள் சிலவற்றை மறுபதிப்பு செய்திருக்கிறேன். இதுகாரும் பொருமை காத்த என் கோடானு கோடி ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்.

காந்தியும் நானும் ஒரே நாட்டுக்காரர்கள் ஆகையால், சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டும் என்று மனசும், விரல்களும் துடிக்கின்றன. அதனால்...

1) கவிதை எனக்கு எளிதாய் வருவதில்லை. கடந்த ஆறு வருடங்களில் பத்து கவிதை எழுதியிருந்தால் அதிகம்.

2) சரக்கிண்மை, சோம்பல் - இரண்டும் என்னுடைய lack of productivity-க்குக சம அளவில் காரணம்.

3) அதிகமாக cyberspace-ல் உலவாததற்கு, ஆங்கிலத்தில் தட்டச்சி, தமிழில் வார்த்தைகளை வரவழைப்பதில் உள்ள ஆயாசம் காரணம்.

3) எழுதிய கவிதைகள் பத்தில் ஐந்தையோ ஆறையோ 'தினம் ஒரு கவிதை'க்கு அனுப்பினேன். அந்நாள் லாவண்யா, இந்நாள் என். சொக்கன் புண்ணியத்தில் ஒன்றிரண்டைத் தவிற அனைத்தும் 'ஃபோட்டோ ஷாப்' ஏறின. (வாழ்க லாவண்யா/என். சொக்கன்/நாகாஸ்! வளர்க அன்னாரது புகழ்! - நான் எழுதியவற்றையெல்லாம் வசைமொழி பொழியாமல் சகித்து வந்த குழு நண்பர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்!)

4) அந்த ஐந்து, ஆறில் தேடிப் பிடித்த மூன்றைத்தான் இன்று காணப் போகிறீர்கள். இங்கு 'தேடிப் பிடித்த' என்பதன் சரியான அர்த்தத்தைத் விளக்கக் கடமைப் பட்டவனாகிறேன். ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு ஊரிலிருக்கும் போது, வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி உபயோகிக்கும் போது வெளியாகினவாகையால், எல்லாமே prompt ஆக archive செய்யப் பட்டனவாகையால், இந்த மூன்று முத்துக்களை (டேய், அடங்குடா!) தேடிப் பிடிப்பது, இவற்றை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமாயிருந்தது. (உண்மையான கவிஞனாயிருப்பின் மறுபடி எழுதியிருப்பான். என் போன்ற அதிமேதாவிக்கு எழுதிய ஐந்து நிமிடம் கழித்துக் கேட்டால் கூட வார்த்தையெல்லாம் மாத்தி மாத்தி போட்டு தத்துப் பித்துவென்று உளறத் தான் தெரியும். இதில் மறுபடி எழுதுவதாவது? அடப்போங்கய்யா...)
----------------------------
இனியும் உங்களை நகம் கடிக்க வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இதோ நீங்கள் கேட்ட கவிதை(கள்)...

கவிதை 1: அம்மா
--------------------------


Posted by Hello

கவிதை 2: காலச்சுருக்கம்
------------------------------------


Posted by Hello

கவிதை 3: பாட்டி
--------------------------


Posted by Hello

-------------------------------------
வாசித்துக் கருத்தைச் சொல்லுங்கள். அப்படியேனும் comments count அதிகரிக்கிறதா என்று பார்ப்போம்.

அடுத்த முறை பதிக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெருவது, உங்கள் நண்பன், R. K. மூர்த்தி.

Wednesday, May 26, 2004

பல்லவனில் முன்னேறுவது எப்படி?

பல்லவனில் முன்னேறுவது எப்படி? (குறிப்பாக பள்ளிச்சிறார்களுக்கு)
------------------------------------------------------------------------

அரை டிக்கெட்டுகளுக்கு 'தடுக்கப்படாத பார்வை' (unobstructed view-க்கான அடியேனின் தமிழாக்கம்!) நிச்சயக்கப்பட்ட ஒரு இடம் ஓட்டுனருக்கும், கியருக்கும் இடைப்பட்ட அந்த முக்காலடி இடைவெளிதான். உண்மையில் தடுக்கப்பட்ட பார்வையைக் காட்டிலும் அந்த சத்தியக்கப்பட்ட நிலத்தை (Promised Land) நோக்கி நாங்களெல்லாம் முட்டிமோதுவர்க்கு மூச்சுதான் காரணம். பின்னென்ன...அந்த பல்லவக் கூட்டத்தின் நடுவில் மாட்டிக்கொண்டால் அதோகதி தான்.

இந்த முக்காலடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டால் ஓட்டுனர் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கும் நேராய் இடது பக்கத்தில் கியர் பாக்ஸ்க்கு அருகில் ஒரு ஓரடிக்கு ஓரடி சதுர சொர்க்கம் உண்டு. பெரும்பாலும் என் போன்ற பால் மணம் மாறாத பள்ளி பாலகர்கள் (சரி...சரி...) தவிற யாரும் இங்கு உட்கார மாட்டார்கள். புத்தகப் பையை வாகாக கியர் பாக்ஸ் மேல் வைத்துவிட்டு ஹாயாய் பள்ளிக்கவலையை மறந்து வேடிக்கைப் பார்க்க இதுவும் ஒரு சுகமான இடம்.

இப்படிப்பல வசதிகள் இருப்பதால் யாரும் சொல்லாமலேயே 'முன்னேறுவதில்' முனைப்பாய் இருப்போம்.

இந்தப் புத்தகப் பையை (மூட்டையை) குறை கூறாமல் ஒரு நாளும் பெருசுகளால் இருக்க முடியாது. எங்களைப் பொறுத்த வரையில் இதுதான் பிரம்மாஸ்திரம். பின்னால் நடத்துனர் இருக்கை அருகிலிருந்து ஆரம்பித்தால் ஓட்டுனர் வரை சென்றடைய இடது பக்கம் ஒருமுறை வலது பக்கம் ஒருமுறையென புத்தகப் பையை இப்படியும் அப்படியுமாய் இடித்தவாரே சென்றோமென்றால் சொர்க்கத்தின் வாசல் தானாய் திறக்கும். வழி நெடுக வசவுகளும் கிடைக்கும். அவற்றையெல்லாம் யார் கண்டு கொண்டார்கள்.

'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது போல் என்னைப் பொறுத்தவரை 'இடியுங்கள் இடம் விடப்படும்' தான் தாரக மந்திரம்.

பின்னாளில் இடிக்கப்பட்ட போது அது ஒன்றும் பெரிய கஷ்டமாய்த் தெரியவில்லை.

-----------------------------------


நடத்துனராகத் தேவையான தகுதிகள்:

1) அள்ள அள்ளக் குறையாத 'எச்சில் சுரப்பி' (salivary gland) --> பயணச்சீட்டு கிழித்துக் கொடுப்பதற்கு.

2) பொடிப் பொடியாய் எண்கள் எழுதும் திறமை --> ஒவ்வொரு stage முடிவிலும் stage close செய்து கடைசியாய் கொடுத்து முடித்த பயணச்சீட்டின் எண்களை ஒரு customized spreadsheet-ல் நுணிக்கி நுணிக்கி எழுதிட. (எனக்கும் கூட இந்தத் திறமை இருந்ததால் என் UKG கணக்கு டீச்சர் கண்ணாடி போட நேர்ந்ததாய் என் அம்மா சொல்லிக் கேள்வி.)

3) கூசாமல் பொய் சொல்லும் திறமை --> பை நிறைய சில்லரை இருந்தாலும் சில்லரை இல்லை என்று புளுக. (பல்லவன் நஷ்டத்தில் ஓடுவதற்கு 'சில்லரை இல்லேன்னா ஏறாத' என்று இவர்கள் பிஸினஸை விரட்டுவது கூட ஒரு காரணமாய் இருக்கக் கூடும்)

4) சமூகத்தின் மீது தீராத காதல் --> ஏறிய நொடி முதல் 'முன்னாடி போ, முன்னாடி போ' என்று ஓயாமல் உந்தித் தள்ள (சில சமயங்களில் literally உந்தித் தள்ள)

5) புஜ பல பராக்கிரமம் --> படியடிக் கதாநாயகர்களுடன் தேவையெனில் ஒண்டிக்கு ஒண்டி மோதிட.

Sunday, May 23, 2004

பல்லவன் பயணங்கள்

பல்லவன் பயணங்கள்
----------------------------

அக்மார்க் சென்னை வாசியான என் பள்ளிக்கால வாழ்க்கையில் பல்லவன் (அந்நாள் பல்லவன், இந்நாள் மாநகர போக்குவரத்துக் கழகம்) பெரும் பங்கு வகித்தது.

பல்லவனைப் பற்றி நினைவில் நிற்பவை:

1. அடர்த்தியில் Black Hole-உடன் போட்டி போடக்கூடிய ஒரே விஷயம் - காலை, மாலை வேளை பல்லவன் மட்டுமே. 50, 60 காசுக்கு நரக வாசல் வரை அழைத்துச் செல்லும் மலிவு விலை space shuttle.

2. இடம் பிடிக்கும் முறை: இது பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நூற்றிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப் பட்டிருப்பதாக BBC-ல் சொன்னார்கள். என் சொந்த அனுபவம், மற்றும் அந்தக் கட்டுரைகள், இவற்றை ஆதாரமாகக் கொண்டு நான் எழுதிக் கொண்டிருக்கும் 'How to get a seat in PTC for Dummies', 'Idiot's Guide to Seat Catching in PTC', 'Seat catching in PTC demystified', 'PTC & Seat Catching 2.0 in 21 days', 'பல்லவனில் இடம் பிடிப்பது எப்படி' ஆகிய புத்தகங்களின் சாரம் பின் வருமாறு -


Terminus அல்லாத இடத்தில் சீட் பிடித்தல்:
------------------------------------------

உட்கார்ந்திருக்கும் யாராவது எழப் போகிறார் எனில் ஒரு மினி அரசியல் நாடகம் அந்த இடத்தைச் சுற்றி அரங்கேறும். இந்த நவரச நாடகத்தில், தடத்தைப் பொருத்து, போட்டியாளர்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஆறு வரை வேறு படும். வெற்றிகரமாக அந்த இடத்தைப் பிடிக்க வேண்டுமெனில் நான்கு விஷயங்களில் கவனமாய் இருத்தல் அவசியம் -

அ) 'மாண்புமிகு எழுபவர்' எளிதாய் அந்த இடத்தை விட்டு நகரத் தோதாய் இடைவெளி விட வேண்டும். இல்லையேல் 'மாண்புமிகு எழுபவர்' கோபத்திற்கு ஆளாவது நிச்சயம். அது மட்டுமல்லாது, 'மாண்புமிகு எழுபவரும்', நம் போட்டியாளரில் ஒருவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து விடும் பேரபாயம் உள்ளது.

ஆ) 'மாண்புமிகு எழுபவர்' எழுந்த அடுத்த கால் நொடியில் நாம் அந்த இடத்தில் உட்கார ஏதுவாய் நம்மை position செய்து கொள்ள வேண்டும்.

இ) மிக முக்கியமாய், வேறு யாருக்கேனும் சம வாய்ப்பு இருப்பின், அவருக்கு முன்னால் (அவருக்குத் தெரியாத படி) நின்று கொள்வது சாலச் சிறந்தது.

ஈ) வழக்கமாய்ப் போகும் பேரூந்து எனில், வழக்கமான பயணிகளின் 'இறங்கும் இடம்' குறித்த database maintain செய்வது மிக அவசியம். நீண்ட தூரப் பயணியெனில் தூர விலகுவதும், குறைந்த தூரப் பயணியெனில் நெருங்கி நிற்பதும் கால்களின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

Terminus-ல் (பேரூந்து நிறுத்தம்) சீட் பிடித்தல்:
---------------------------------------------

** திறமை 1 **

தேவை:

அ) நன்றாகக் கிழிந்த துண்டு அல்லது கைக்குட்டை
ஆ) வெளியிலிருந்து ஜன்னல் வழிய எட்டி துண்டு/கைக்குட்டை ஆகியவற்றை போடத் தேவையான உயரம்



வழிமுறை:

வழக்கமாக போரூந்து நிற்கும் இடத்தை, GPS போன்ற சாதனங்களின் உதவியின்றி (அல்லது வசதியிருப்பின் உதவியிடன்) குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஒட்டுனரின் வசதிக்கேற்ப நிற்கும் இடத்தில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதை கருத்தில் கொள்வது அவசியம்.

மொத்தத்தில், தடம் எண், ஓட்டுனர், ஓட்டுனரின் மனநிலை, நடத்துனர், நடத்துனரின் மனநிலை, நாள், கிழமை, மீனம், மேஷம், ஆடி, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை ஆகிய விஷயங்களைக் கணக்கிட்டு, வண்டி நிற்கும் இடத்தை அறுதியிட வேண்டும். பின்னர், வண்டி புறப்படும் நேரம் என அட்டவணையில் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னர் இருத்தல் நன்று. வண்டி நிற்கும் இடம் மட்டுமன்றி, புறப்படும் நேரமும் மேற்குறிப்பிட்ட காரணிகள் (ஓட்டுனர், ஓட்டுனரின் மனநிலை...) பொறுத்து வேறுபடுமாகையால் இந்த முன்னெச்சரிக்கை அவசியம்.

நம் ராசி நல்லதாயிருந்து, மழை, தூரல், காற்று, வெயில், வேலை நிறுத்தம் இன்ன பிற தடங்கல்கள் இல்லாதிருப்பின், ஒரு சுபயோக சுப வேளையில் நம் பச்சை தேவதை (என் பள்ளிக் காலங்களில் பல்லவன் பெரும்பாலும் பச்சை நிறத்தினன்) நம் கண் முன் காட்சி அளிக்கக் கூடும். அப்போது கை, கால் உதறலின்றி, கையிலேந்திய கிழிந்த துண்டை (அல்லது கைக்குட்டையை) பேரூந்தின் ஒரு ஜன்னலின் வழியே சீட்டை நோக்கி எறிய வேண்டும். இந்தத் திறமைக்கு இரண்டு வருடப் பயிற்சி அவசியம்.

நன்றாகக் கிழிந்த துண்டு அல்லது கைக்குட்டையை சீட்டில் எறிவதுடன் நம் கடமை முடிந்து விடுவதில்லை. ஓடிச் சென்று முன்பதிவு செய்த இடத்தில் உட்கார்ந்தாலொழிய ஒன்றும் நிச்சயமில்லை.

மனமிருந்தால் மார்கமுண்டு என்றறிருந்து, இஷ்ட தெய்வத்தைப் ப்ரார்தித்து முயல்வோமாயின் ஒரு பத்து விழுக்காடு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

** திறமை 2 **

தேவை:

அ) பேரூந்து நிற்பதற்கு முன்னரே ஓடி ஏறக்கூடிய இளமை
ஆ) நடத்துனரின் வசை மொழிகளைத் தாங்கத் தேவையான சொரணையின்மை. (பேமானி, ஊட்ல சொல்டு வன்ட்டியா?)

வழிமுறை:

இந்தத் திறமையில் பேரூந்து நிற்கும் இடத்தை சரியாகக் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் திறமை 1-ல் குறிப்பிட்டிருந்த காரணிகளைக் கொண்டு பேரூந்து வரக்கூடிய நேரத்தை அறிவது மிக அவசியம்.

நிறுத்தத்திற்குள் பேரூந்து நுழைந்ததும் பேரூந்தின் பின் 'பி. டி. உஷா' செய்ய வேண்டும். பேரூந்தின் வாயிலை அடைந்தவுடன், Matrix Keanu Reeves-ஆக மாறி பேரூந்திலிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்களை bullet-ஆக பாவித்துத் தவிர்த்து முன்னேர வேண்டும். பேரூந்தின் கைப்பிடி நம் கையில் அகப்பட்டதும் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு நம் பாரத்தை வண்டி மீது மாற்ற வேண்டும்.

இந்த 'விக்ரம் தர்மா' சமாசாரத்தின் போது மிகப் பலர் கண்கள் மூடிய ஆழ்நிலை தியான நிலையில் இருப்பர். நீங்கள் அவ்வகையினராயின், பேரூந்தின் மீது பாரத்தைப் போட்டவுடன் தியான நிலையிலிருந்து வெளிவருவது நல்லது. பின்னர், பிடித்தமான ஒரு ஜன்னலோரத்தில் அமர்ந்து, கொண்டு வந்திருக்கும் புட்டியிலிருந்து மடக் மடக் என்று கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும்.

காலை மாலை இரண்டு வேளையிலும் இவ்வாறு பேரூந்தில் இடம் பிடித்து வந்தால் ஜாகிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்று எங்கள் ஊர் 'முன்னா பாய் M. B. B. S' சொல்வதுண்டு.

---------------------

இந்த புத்தகங்களின் கையெழுத்துப் ப்ரதியைப்படித்து மெச்சிய சிலர், இந்த technique-களுக்கு டெல்லி, மும்பை ஆகிய நகரங்களிலும் பயன் இருப்பதாகக் கூறி ஹிந்தி, மராத்தி மற்றும் ஏனைய இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கான முன்னுரிமையை வாங்கிக் கொண்டு விட்டனர் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

----

இந்தப் பதிப்பே இரண்டரைப் பக்கம் வளர்ந்து விட்டதால், மற்ற பல்லவன் விஷயங்கள் அடுத்த பதிவில் (அடுத்தடுத்த பதிவுகளில்?).

TO COME:

1) பல்லவனில் நின்று பயணம் செய்வது எப்படி?
2) பல்லவன் நடத்துனர் ஆகத் தேவையான திறமைகள் என்னென்ன?
3) பல்லவனுக்காக காத்திருக்கும் நேரத்தில் எப்படி பொழுதைப் போக்குவது?

Saturday, May 22, 2004

மேய்வதற்கே நிறைய இருப்பதால் விளைப்பதற்கு நேரமே இருப்பதில்லை. நல்ல நொண்டிச்சாக்கு!

------

இந்த வாரத்திற்கான எழுதத்தோதான விஷயம்...

NBAவில் Western Conference semi-final ஏழாவது game இந்த வாரம் நடந்தது.

மூன்றாவது, நான்காவது quarter-களில் முழுக்க முழுக்க Kevin Garnett-ன் (KG) ஆட்சி. வர்ணனயாளர்கள் திரும்பத் திரும்ப சொன்னது போல், இந்த season-க்கான MVP விருதை சும்மாவான KG-க்கு கொடுத்து விடவில்லை.

என்னைப் பொருத்த வரையில், KG totally deserves the MVP.

ஒரு மாறுதலுக்காக Western Conference final-ல் Lakers-உடன் Timberwolves மோதுவார்கள். நான் Timberwolves-க்காக வேண்டிக்கொள்ளப் போகிறேன்.

இருந்தாலும் Karl Malone-க்காக கொஞ்சமே கொஞ்சமே Lakers-க்கு support செய்யலாம் என்று மனசு சொல்கிறது.

பார்க்கலாம்.

Sunday, May 16, 2004

The real beginning

Every good thing must have a beginning. Here it goes...

எப்படி ஆரம்பிப்பது, என்ன எழுதுவது ஒன்றும் யோசித்து வைக்கவில்லை. ஏதெனும் எழுத வேண்டும் என்று மட்டும் முடிவு செய்ததால், இப்படி ஆரம்பிக்கிறேன்.

நான் எழுதியவை என்று இணையத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. "தினம் ஒரு கவிதை" yahoogroup-ல் என் கிறுக்கல்கள் சில வெளியாகின. அவ்வளவே.

அவற்றுள் சுமாரான ஒன்று இரண்டை (தேடிப் பிடித்து) இங்கு சில நாட்களில் வெளியிடுகிறேன்.

----------------------------------------------


இந்த blog-ஐ யாரேனும் படிக்க நேர்ந்தால், 'overmuser' என்று பெயர் இருப்பதைக்கண்டு கொஞ்சமே கொஞ்சம் நெற்றி சுருக்கக்கூடும்.

மாதிரிக்கு சில overmusings...

1) Isn't 'Black Colour' an oxymoron?
2) Would you still call it an elevator when it is going down?

இவை எல்லாம் எனக்கென்னவோ என் சொந்த சிந்தனைகளாக தோன்றுகின்றன. இவற்றை யாரேனும் வேறு எங்கேனும் படித்திருப்பின், தயவு செய்து எனக்குத் தெரிவிக்கவும். ஒரு வேளை sub-conscious-ஆக plagiarize செய்திருப்பேன்.

Tamil

எல்லாம் இறைவன் செயல்.

Tuesday, May 11, 2004

Hello, World!

Blog testing 1, 2, 3!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Web Counter by TrafficFile.com