Wednesday, May 26, 2004
பல்லவனில் முன்னேறுவது எப்படி?
பல்லவனில் முன்னேறுவது எப்படி? (குறிப்பாக பள்ளிச்சிறார்களுக்கு)
------------------------------------------------------------------------
அரை டிக்கெட்டுகளுக்கு 'தடுக்கப்படாத பார்வை' (unobstructed view-க்கான அடியேனின் தமிழாக்கம்!) நிச்சயக்கப்பட்ட ஒரு இடம் ஓட்டுனருக்கும், கியருக்கும் இடைப்பட்ட அந்த முக்காலடி இடைவெளிதான். உண்மையில் தடுக்கப்பட்ட பார்வையைக் காட்டிலும் அந்த சத்தியக்கப்பட்ட நிலத்தை (Promised Land) நோக்கி நாங்களெல்லாம் முட்டிமோதுவர்க்கு மூச்சுதான் காரணம். பின்னென்ன...அந்த பல்லவக் கூட்டத்தின் நடுவில் மாட்டிக்கொண்டால் அதோகதி தான்.
இந்த முக்காலடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டால் ஓட்டுனர் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கும் நேராய் இடது பக்கத்தில் கியர் பாக்ஸ்க்கு அருகில் ஒரு ஓரடிக்கு ஓரடி சதுர சொர்க்கம் உண்டு. பெரும்பாலும் என் போன்ற பால் மணம் மாறாத பள்ளி பாலகர்கள் (சரி...சரி...) தவிற யாரும் இங்கு உட்கார மாட்டார்கள். புத்தகப் பையை வாகாக கியர் பாக்ஸ் மேல் வைத்துவிட்டு ஹாயாய் பள்ளிக்கவலையை மறந்து வேடிக்கைப் பார்க்க இதுவும் ஒரு சுகமான இடம்.
இப்படிப்பல வசதிகள் இருப்பதால் யாரும் சொல்லாமலேயே 'முன்னேறுவதில்' முனைப்பாய் இருப்போம்.
இந்தப் புத்தகப் பையை (மூட்டையை) குறை கூறாமல் ஒரு நாளும் பெருசுகளால் இருக்க முடியாது. எங்களைப் பொறுத்த வரையில் இதுதான் பிரம்மாஸ்திரம். பின்னால் நடத்துனர் இருக்கை அருகிலிருந்து ஆரம்பித்தால் ஓட்டுனர் வரை சென்றடைய இடது பக்கம் ஒருமுறை வலது பக்கம் ஒருமுறையென புத்தகப் பையை இப்படியும் அப்படியுமாய் இடித்தவாரே சென்றோமென்றால் சொர்க்கத்தின் வாசல் தானாய் திறக்கும். வழி நெடுக வசவுகளும் கிடைக்கும். அவற்றையெல்லாம் யார் கண்டு கொண்டார்கள்.
'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது போல் என்னைப் பொறுத்தவரை 'இடியுங்கள் இடம் விடப்படும்' தான் தாரக மந்திரம்.
பின்னாளில் இடிக்கப்பட்ட போது அது ஒன்றும் பெரிய கஷ்டமாய்த் தெரியவில்லை.
-----------------------------------
நடத்துனராகத் தேவையான தகுதிகள்:
1) அள்ள அள்ளக் குறையாத 'எச்சில் சுரப்பி' (salivary gland) --> பயணச்சீட்டு கிழித்துக் கொடுப்பதற்கு.
2) பொடிப் பொடியாய் எண்கள் எழுதும் திறமை --> ஒவ்வொரு stage முடிவிலும் stage close செய்து கடைசியாய் கொடுத்து முடித்த பயணச்சீட்டின் எண்களை ஒரு customized spreadsheet-ல் நுணிக்கி நுணிக்கி எழுதிட. (எனக்கும் கூட இந்தத் திறமை இருந்ததால் என் UKG கணக்கு டீச்சர் கண்ணாடி போட நேர்ந்ததாய் என் அம்மா சொல்லிக் கேள்வி.)
3) கூசாமல் பொய் சொல்லும் திறமை --> பை நிறைய சில்லரை இருந்தாலும் சில்லரை இல்லை என்று புளுக. (பல்லவன் நஷ்டத்தில் ஓடுவதற்கு 'சில்லரை இல்லேன்னா ஏறாத' என்று இவர்கள் பிஸினஸை விரட்டுவது கூட ஒரு காரணமாய் இருக்கக் கூடும்)
4) சமூகத்தின் மீது தீராத காதல் --> ஏறிய நொடி முதல் 'முன்னாடி போ, முன்னாடி போ' என்று ஓயாமல் உந்தித் தள்ள (சில சமயங்களில் literally உந்தித் தள்ள)
5) புஜ பல பராக்கிரமம் --> படியடிக் கதாநாயகர்களுடன் தேவையெனில் ஒண்டிக்கு ஒண்டி மோதிட.
4 Comments:
At 3:50 AM,
Anonymous said…
Nice one again. Where is the marathdai kadhaigal
- Vinesh
At 10:26 PM,
Kangs(கங்கா) - Kangeyan Passoubady said…
நடத்துனராகத் தேவையான தகுதிகள் - அருமையான தகுதிகள்
At 1:11 AM,
சனியன் said…
மிக எளிய சுஜாதா நடை. நன்று. எனக்கு மிக நல்ல யோசனைகள் தந்திருக்கிறீர்கள். பயனளிக்கிறதா எனப் பார்ப்போம்.
வாழ்த்துக்கள். தொடருங்கள்.
At 2:21 PM,
Moorthy said…
JSri, தவறைச் சுட்டியதற்கு நன்றி! I will try to be more careful in future.
That shows how out of touch I am with Tamil. No excuses!
Post a Comment
<< Home